வைரமுத்து கவிதை - இது போதும் எனக்கு


வைரமுத்துவின் கவிதைகள் பிடிக்க காரணம் அவை அனைத்தும் உணர்வுல்லவை உணர்வுகளை தூண்டுபவை, புது யுகத்தில் புத்திசாலிதனத்தில் புதைந்து மழுங்கி போன நம் பாரம்பரிய  அழகை கொண்டவை, விலை மதிப்பில்லா விஷயங்களை நியாபகப்படுத்துபவை, இதயத்திற்கு இதமானவை, அப்படி இருப்பவைகளில் ஒன்று இங்கே..!!


அதிகாலை ஒலிகள்
ஐந்துமணிப் பறவைகள்
இருட் கதவு தட்டும்
சூரியவிரல்
பள்ளியெழுச்சிப் பாடும் உன்
பாதக்கொலுசு
உன் கண்ணில் விழிக்கும்
என் கண்கள்

இது போதும் எனக்கு

தண்ணீர் போலொரு வெந்நீர்
சுகந்தம் பரப்பும் துவாலை
குளிப்பறைக்குள் குற்றாலம்
நான் குளிக்க நனையும் நீ

இது போதும் எனக்கு

வெளியே மழை
வேடிக்கை பார்க்க ஜன்னல்
ஒற்றை நாற்காலி
அதில் நீயும் நானும்

இது போதும் எனக்கு

குளத்தங்கரை
குளிக்கும் பறவைகள்
சிறகு உலர்த்தத்
தெறிக்கும் துளிகள்
முகம் துடைக்க உன் முந்தானை

இது போதும் எனக்கு

நிலா ஒழுகும் இரவு
திசை தொலைத்த காடு
ஒற்றையடிப் பாதை
உன்னோடு போடி நடை

இது போதும் எனக்கு

மரங்கள் நடுங்கும் மார்கழி
ரத்தம் உறையும் குளிர்
உஷ்ணம் யாசிக்கும் உடல்
ஒற்றைப் போர்வை
பரஸ்பர வெப்பம்

இது போதும் எனக்கு

நிலாத் தட்டு
நட்சத்திரச் சோறு
கை கழுவக் கடல்
கை துடைக்க மேகம்
கனவின் விழிப்பில்
கக்கத்தில் நீ

இது போதும் எனக்கு

தபோவனக் குடில்
தரைகோதும் மரங்கள்
நொண்டியடிக்கும் தென்றல்
ஆறோடும் ஓசை
வசதிக்கு ஊஞ்சல்
வாசிக்கக் காவியம்
பக்க அடையாளம் வைக்க
உன் கூந்தல் உதிர்க்கும்
ஓரிரு பூ

இது போதும் எனக்கு

பூப்போன்ற சோறு
பொரிக்காத கீரை
காய்ந்த பழங்கள்
காய்கறிச் சாறு
பரிமார நீ
பசியாற நாம்

இது போதும் எனக்கு

மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம்
பிரம்பு நாற்காலி
பிரபஞ்ச ஞானம்
நிறைந்த மௌனம்
நீ பாடும் கீதம்

இது போதும் எனக்கு

அதிராத சிரிப்பு
அனிச்சப் பேச்சு
உற்சாகப் பார்வை
உயிர்ப் பாராட்டு
நல்ல கவிதை மேல்
விழுந்து வழியும்
உன் ஒரு சொட்டு கண்ணீர்

இருந்தால் போதும்
எது வேண்டும் எனக்கு?


Comments

Popular posts from this blog

உறக்கமில்லா இரவுகளில் இரக்கமில்லா நினைவுகள்