வண்ணங்களை
சலவை செய்ய
சம்மதிப்பதில்லை
வானவில் மழையிடம்
முட்களில்
அமர்ந்திருந்தபோது
சிரித்த ரோஜா
பறித்ததும் வாடியது
இரைகளுக்காக
இறக்கைகளை
பறிகொடுப்பதில்லை
எப்போதும் பறவைகள்
வீழ்ந்ததற்காக
தேங்கிவிடுவதில்லை
ஒருபோதும்
அருவி
நடப்பதற்கும்
கடப்பதற்கும்
பாதைகள் எதற்குப் புதிதாய்?
பாதங்கள் போதும்!